தமிழிசை: பாணரும் நாடோடிகளும்

 பேரா. முனைவர் அமுதா பாண்டியன்

                                                             முதல்வர்( ப.நி.)

                                                         நந்தனம் அரசு கலைக்கல்லூரி, சென்னை

இந்திய இசை குறித்தான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளும் பொழுது இரண்டு பொருண்மைகளை நாம் மனதில் கொள்ள வேண்டும்.  கர்நாடக இசை, இந்துஸ்தானி இசை என்ற இரண்டு செவ்விசை முறைகள் தற்காலம் இந்தியாவில் பயிலப்படுகின்றன. தக்காண மலைகளுக்கு மேல் வட இந்தியா என்றும் அவற்றிற்கு கீழ் தென் இந்தியா என்றும் கொண்டால், வட இந்தியாவில் பயிலும் முறை இந்துஸ்தானி என்றும் தென் இந்தியாயில் பயிலும் முறை கர்நாடக இசை என்றும் கொள்ளல் வேண்டும்.  இவையும், பயிலும் முறையும் இராக அட்டவணைப்படுத்தப்படும் முறையும் தான் வேறுபடுகின்றனவே தவிர, இவை இரண்டிற்குமான இலக்கணம் ஒன்றே. இராக முறை கொண்ட ஒழுகிசை. (melody)

    இலக்கண அடிப்படை ஒன்றாக இருக்கும் கண் இவை இரண்டும் ஒரே இசையாக பயின்று தான் பின்னர் பிரிந்திருக்க வேண்டும்.  முதலாவது கர்நாடக இசை, தென்னிந்திய இசை என்று பிரித்து பெயரிட்டது மராட்டிய தேசத்தின் மன்னன் சோமேஸ்வர பூலோக மல்லன் (1116 – 1127) என்பான். சிறந்த இசையாளனாக இருந்த இவன் தன் நாட்டிற்கு கீழான நாடுகளில் பயின்று வந்த இசை முறையை கருநாடக இசையென்றும், தன் நாட்டிற்கு மேலான இடங்களில் பயில பெறும்  இசையை இந்துஸ்தானி இசையென்றும் கூறினான். கருநாடு என்றால் கர்நாடகத்தை குறிப்பது மட்டுமின்றி அதற்கு கீழான நாடுகளையும் சேர்த்து குறிக்கும் பழமை என்ற பொருளும் உண்டு.

இந்திய துணைக்கண்டம் முழுவதுமாக தொன்று தொட்டு வழங்கப்பட்ட இசை இந்திய பாணர்களின் இசை ஆகும்.  இவ்விசை வடநாட்டில் ஆரிய படையெடுப்புகளாலும், வேத கால ஒப்புதல் இல்லாமையாலும், நலிந்து பின் பாரசீக முகலாய படையெடுப்புகளால் ஏற்பட்ட கலாச்சார மாறுதல்களால் மாறுபட்டு இந்துஸ்தானி இசையாக மாறியது. ஆனால்     தென்னிந்தியாவில் இசை இத்தகைய, எந்தவிதமான மாற்றமும் அடையாமல், பாணர்களால் வளர்க்கப்பட்டு சங்க காலத்தில் செவ்விசையாக உருவாகி வளர்ந்தது. இவ்வித இசையின் இலக்கணத்தை தென்னிந்திய திராவிட இலக்கியத்தில், திராவிடத்தின் பழமை வாய்ந்ததுமான முக்கிய இலக்கியமாகிய தமிழில் தான் காணல் வேண்டும்.

“ மிகப் பழமையான காலங்களிலிருந்து அங்கு (தென் இந்தியா) இசை செழித்தோங்கியது என்பார்”, ஹண்டர். இந்தியர்களால் பயில பெற்ற 7 இசைநரம்புகளும் பாரசீகம்  அரேபியா வழியாக ஐரோப்பிய இசையில் கி.பி. பதினொன்றாம் நுற்றாண்டில் தோன்றியது” என்பார்.(65) இவற்றிலிருந்து இந்திய துணைக்கண்டம் முழுவதும் ஒரே விதமான இசைதான் இசைக்கப் பெற்றது என்று தெரிகிறது. பாணர்கள் அரண்மனைகளிலும் வீடுகளிலும் திருவிழாக்களிலும் இவ்விசையைத் தான் இசைத்தார்கள்.  வட இந்தியாவிலும் இவ்வகுப்பினர் இன்றும் வாழ்வதால் வட இந்தியாவிலும் இவ்விசையே பயின்று வந்தது.

பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதி மற்றும் பதினொன்பதாம் நூற்றாண்டின் துவக்க காலங்களில் ஐரோப்பிய குறவர்களைப் (நாடோடிகள்) பற்றிய ஆராய்ச்சிகள் பெருகின.  அக்காலத்தில், உலகமனைத்தும் பரவிய குறவர்களின் பூர்வீகம் இந்தியா என்று கண்டறியப்பட்டது. வேத காலங்களிலும், அதற்கு பின்னர் ஏற்பட்ட படையெடுப்புகளாலும், சாதிய பின்னடைவுகளாலும் பெறும்பாலும் வட இந்தியாவிலிருந்த பாணர்கள், பறையர்கள் மற்றும் கொமட்டியர்கள் தங்கள் இசையுடன் உலகின் பல பாகங்களுக்கும் செல்ல ஆரம்பித்தனர்.  2500 வருட பழைய யாழ், மெசபத்தோமியா கல்லறையில் கண்டெடுக்கப்பட்டது இக்கூற்றை நிரூபிக்கிறது. சமுதாய பொருளாதார அடிப்படையில் நலிவுற்று, சமுதாய ஏற்பினை நழுவ விட்ட மக்கள், அடிமை வாழ்க்கையை விட சுதந்திரமான வாழ்க்கையையே விரும்பினர். இவர்கள் எப்போது, என்ன காரணங்களால் இந்தியாவை விட்டு வெளியேறினர் என்பதையும் இவர்கள் பாணர்கள் தானா என்பதையும் குறித்தும் ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

தென்கிழக்கு ஆசிய நாடுகளான தாய்லாந்து, இந்தோனேசியா போன்ற நாடுகளில் இவர்கள் கடல் குறவர் (Sea Gypsies) என்று அழைக்கப்படுகிறார்கள்.  திராவிடர்கள், திரையர்கள் என்ற பெயருடனும் அழைக்கப்படுவர். முக்கியமாக சோழர் காலத்தில், சோழ மன்னர்கள் கிழக்காசிய நாடுகளில் தங்கள் கப்பற் படையின் வலிமையால் வர்த்தகத்தில் ஈடுபட்ட போது தென்னிந்தியாவிலிருந்து சென்ற இசைவாணர்களும், பாணர்களுமே இந்த கடல் குறவரின் மூதாதையர்.  இவர்கள் குடியேறிய நாடுகளில் நெருக்கடி ஆகும் காலங்களில் இவர்கள் கடல்களிலும் வாழ ஆரம்பித்தனர். கடல் சூழ்ந்த தென்னிந்தியாவின் வாழ்க்கை முறை இவர்களுக்கு உதவியாக இருந்தது.

    ஐரோப்பா முழுவதும் வாழும் குறவர்கள் `டோம்’ என்றும் `ரோம்’ என்றும் அழைக்கப்படுகின்றனர்.  இவர்கள் பெரும்பாலும் வடஇந்தியாவிலிருந்து சென்றவர்கள் ஆவர். பெரும்பாலான ஆராய்ச்சியாளர்கள் இவர்கள் பேசிய மொழி இந்திய ஆரியன் மொழி குடும்பத்தைச் சார்ந்தது என்று கூறுகின்றனர்.  இவ்விடத்து இந்திய மொழி வரலாறு குறித்து மிகச்சுருக்கமாகக் கூறுவது இன்றியமையாதது.

         சிந்து வெளி நாகரிகம் திராவிட நாகரிகம் என்பதும், ஆரியர் வருகையின் போது இந்தியா முழுவதும் பழமையான தொல் திராவிட மொழியையே பேசி வந்தனர் என்பதும், யாவரும் அறிந்ததே.    ஆரியர்கள் பேசிய ஜெர்மானிய மொழி, பாரசீகம், முண்டா  மொழிகளுடன் கலந்து இந்தியாவில் பெரியளவில் திராவிட மொழிகளின் சொற்களை உள்வாங்கி வட மொழியாக மாறியது.  இது செம்மை செய்யப்பட்டு சமஸ்கிரதமாக வேத மொழியாக, ஆண்கள் மட்டுமே பேசும் மொழியாக உருவாக்கப்பட்டது. மக்கள் பேசிய மொழி பிராகிரதம் என்று அழைக்கப்பட்டு, ஒவ்வொரு பகுதியிலும் வெவ்வேறு பேச்சு வழக்கு வகைகளாக மாறி இன்றுள்ள வட இந்திய மொழிகளாக உருபெற்றுள்ளன.  பொதுவாக வடமொழி என்று நாம் அழைப்பது சமஸ்கிருதத்தையே. அதனால் வட இந்தியாவிலிருந்து சென்ற குறவர்களின் மொழி வட இந்திய மொழியாகத்தான் இருக்கும் என்பதில் ஐயமில்லை. ஆனால் குறவர்களின் பூர்வீகம் பற்றியதான ஆராய்ச்சியை மேற்கொள்ளும் பலரும் இந்தியாவின் வரலாற்றையும் சமூக பொருளாதார அடிப்படையில் நிகழ்ந்த மாற்றங்களையும் ஆராயாது மொழியை ஆராய்ந்து இவர்கள் இந்தோ ஆரியர்கள் என்ற முடிவுக்கு வந்து விடுகின்றனர்.

இக்குறவர்களைப் பற்றி விரிவாக முதன் முதலில் ஆராய்ந்தவர் கிரெல்மென் என்பார். பின்னாளின் ஆய்வுகள் பலவும் கிரெல்மென்னின் ஆய்வறிக்கை அடிப்படையிலேயே அமைந்தன. கிரெல்மென், தன் நண்பர் ஒருவர் கூறியதாக ஒரு கூற்றை முன் வைக்கிறார்.  அந்நண்பர் தனக்கு அறிமுகமான பதிப்பாளர் ஒருவருடன் பல பொருண்மைகளைப் பற்றி பேசிக் கொண்டிருந்த போது, அவர்கள் பேச்சு குறவர்களைப்பற்றியதான விவாதத்தில் வந்தது, அப்பொழுது அவர் தனக்கு தெரிந்த ஸ்டீபன் வாய்லி என்பவர் வேய்டன் பல்கலைகழகத்தில் படித்து கொண்டிருந்தபொழுது அவருக்கு மூன்று சக மாணவர்களின் தொடர்பு ஏற்பட்டதாகவும், அவர்கள் பேசிய மொழி நாடோடிகளின் ரோமானி என்ற மொழியை ஒத்திருந்ததாகவும் அவர்கள் தங்களை மலபாரை சேர்ந்தவர்கள் என்றும், கூறியதாக கூறியிருக்கிறார்.  மேலும், அம்மாணவர்கள் சீகேனியா (இலங்கை) என்ற தீவைப் பற்றியும் கூறியுள்ளனர். கிரெல்மென் இந்த நிகழ்வை சுட்டிக்காட்டி அம்மாணவர்கள் மிகவும் படித்தவர்களாக இருந்ததால் அவர்களை பிராமணர் என்றும், இவர்கள் பேசிய மொழி வட மொழியே என்றும் கூறி விடுகிறார். 1  ஆனால்      ஹேன்காக் என்ற பிற்கால அறிஞர் இக்கூறுகளை பல்கலைகழக பதிவுகள்  மூலம் ஆராய்ந்து அம்மாணவர்களின் பெயர்கள் கிருத்துவ பெயர்கள் என்று கூறுகிறார்.   மேலும், அவர்கள் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என்றும், கிறிஸ்தவர்கள் என்றும் அவர்கள் பேசிய மொழி டச்சு அல்லது போர்த்துக்கீசு, அல்லது சிங்கலீஸ் அல்லது மலபாரில் பேசப்பட்ட திராவிட மொழியான தமிழ் என்கிறார்.(53)  இவற்றால் நாம் மொழியில் உள்ள சொற்களை மட்டுமே வைத்து எந்தவொரு முடிவுக்கும் வர முடியாது என்று தெரிகிறது. ஆனால், குறவர் மொழியில் உள்ள சொற்களின் எண்ணிக்கையின் மிகுதியைக் கொண்டு, அவர்கள் பேசிய மொழி வடமொழி என்ற முடிவுக்கு ஆராய்ச்சியாளர்கள் வந்து விடுகின்றனர்.

`டோம்’ `ரோம்’ என்ற சொற்களின் பொருளை பலரும் பலவாறாக விளக்குகின்றனர்.  டோம்பா என்ற சொல் அகராதியில் இல்லாததால் வடமொழி சொல் அல்ல என்றும், வட்டார வழக்கு என்றும் வில்சன் என்பார் கூறுவதாக ஹேன்காக் கூறுகிறார்.(99)  மேலும், அவர் அச்சொல் இந்தியா முழுவதும் பரவியிருந்த ஒரு பழங்குடி இனத்தாரை குறிப்பதாகவும் இவர்கள் இறந்த சடலங்களையும், மிருக உடல்களையும் அப்புறப்படுத்தும் தொழிலை மேற்கொண்டவர்கள் என்றும் கூறுகிறார். டேனர் என்பார் இச்சொல் இசைவல்லுநர்களை குறிக்கும் சொல்லாக இருக்க முடியும் என்றும் காசியில், (தங்கள் வருகையை மேல் சாதியினருக்கு தெரிவிக்கும் பொருட்டு) கையில் வைத்திருக்கும் கொட்டுகளை அடிக்கும் சண்டாளர் என்றும் கூறுவர். (1966:313)

வெளியேறிய காலம்

இந்நாடோடிகள் இந்தியாவை விட்டு வெளியேறிய காலத்தைப் பற்றியும் பல்வேறுபட்ட கருத்துக்கள் உள்ளன.  கீ.மூ.1500 முதல் கி.பி.1500 வரையான 1000 வருடங்களை ஆராய்ச்சியாளர்கள் முன்வைக்கின்றனர். பிளாசூட், பார்னி என்பாரின் கூற்றை அடிப்படையாகக் கொண்டு பின்வருமாறு கூறுகிறார். “குறவர்கள், தென்னிந்தியாவிலிருந்து கி.மு.1500-ல் ஆரியர்கள் படையெடுப்பின் போது வெளியேற துவங்கினர்…(பின்னாளில் வெளியேறினவர்) பூர்வீகம் பஞ்சாப் மாநிலப் பகுதி.  அதன்பிறகு மீண்டும் கிறிஸ்துவுக்குப்பின் ஆறாம் நூற்றாண்டில், இஸ்லாமியர் படையெடுப்பால் வெளியேறினர் என்றும் கூறுகிறார்.”(2005:26)

    இந்தியாவை விட்டு வெளியேறியவர்கள் அரேபியா, எகிப்து முதலிய நாடுகள் வழியாக ஐரோப்பா சென்றடைந்தனர் என்று கூறும் ஆட்சியாளர்கள் கி.பி. பத்தாம் நூற்றாண்டவரான பிர்டோவ்சி என்ற பாரசீக பாடகரை சுட்டிகாட்டி, “பத்தாவது நூற்றாண்டிற்கு முன்னரே இவர்கள் இந்தியாவை விட்டு வெளியேறினர் என்றும் எழுத்தியல் அடிப்படையில் நோக்கும் போது (kenrick & Puxon, 2009, 1-2) கி.பி. ஐந்தாம் நூற்றாண்டிலிருந்து, கி.பி. பதினோராவது நூற்றாண்டிற்கு இடைவெளியில் வெளியேறியிருக்க வேண்டும்” என்றும் கூறுகிறார்.

    ஹேன்காக் என்பவர், இவர்கள் ஒன்பதாம் நூற்றாண்டில் பாரசீகத்தில் இருந்தனர் என்பது உறுதியாக தெரிவதால், ஒன்பதாம் நூற்றாண்டிற்கு முன்னரே இந்தியாவிலிருந்து வெளியேறி பாகிஸ்தான், அர்மேனியா, ஆப்கானிஸ்தான், கிரேக்கம், இரான் முதலிய நாடுகளின் மொழிகளிலுள்ள சொற்களை உள்வாங்கி ஐரோப்பா சென்றனர் என்று கூறுகிறார்.

    பொதுவாக இந்தியாவை விட்டு வெளியேறிய காலம் எதுவாக இருக்கும் என்று ஆராயும்போது,  இவர்கள் இடப்பெயர்வு இந்திய ஆரியர்கள் வருகையிலிருந்து கி.பி.1500 வரையில் படிப்படியாக இருப்பினும் அதிகப்படியான எண்ணிக்கையிலான இடப்பெயர்வு கி.பி.3ஆம் நூற்றாண்டிற்கும், கி.பி.6ஆம்  நூற்றாண்டிற்கும் உள்ளான காலக்கட்டத்தில் நடந்திருக்கும் என்பது தெளிவு.

இவர்கள் யார்?

மரபு வழி ஆராய்ச்சியாளர்கள், இவர்கள் இந்தியா முழுவதுமாக வாழும் கீழ் சாதிகளான சூத்திரர்கள் (பாணர், பரையர்)  என்றே உறுதியாக கூறுகின்றனர். பாணரும், பறையரும் வட இந்தியாவை விட்டு ஏன் வெளியேறினர் என்பதற்கான காரணங்கனை அறிய வேண்டுமெனில் அக்காலகட்டத்தில், சமுதாயத்தில் நிகழ்ந்த மாற்றங்களை கண்டறிவது இன்றியமையாதது.  வேத கால இறுதியில் உருவாகிய நான்கு வர்ண பேதம் புத்த, சீக்கிய மதங்களின் தாக்கங்களால் நலிவுற்றியிருந்த நிலையின் கி.பி.3ம் நூற்றாண்டிலிருந்து ஐந்தாம் நூற்றாண்டு வரை வட இந்தியாவை ஆண்ட குப்த மன்னர்களால் தூக்கிப் பிடிக்கப் பெறுகிறது. இவர்கள் காலத்தில் சமுதாயப் பொருளாதார மாற்றங்களால் சூத்திரர்களாக கருதப்பட்ட விவசாய வேலை செய்வோர் வர்த்தகர்களாக மாறி சமுதாயத்தில் முன்னோக்கி நகர்த்து வைசியர்களாக மாறுகின்றனர்.  அதனால் கூலிவேலை உட்பட்ட உடலுழைப்பு வேலைகள் செய்வதற்காக பாணரும் பறையரும் பணிக்கப்படுகின்றனர். இவர்கள் இக்காலக்கட்டத்தில் தான் மற்ற சாதியினரால் தீண்டத்தகாதவர்கள் என்று கருதப்பட்டு சமுதாயத்திற்கு புறம்பே தள்ளப்படுகிறார்கள். செய்யும் பணிகளால் இவர்கள் மாசுபட்டவர்களாக மேல் சாதியினரால் வரையறுக்கப்படுகிறார்கள். (Jaiswal 114-116)

    இவர்கள் பஞ்சாப் மாநிலத்திலிருந்து வெளியேறியவர் என்று பெருபாலான ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.  பஞ்சாப் கைபர் போலன் கணவாய்களுக்கு அருகாமையில் இருப்பதால் இப்படிப்பட்ட முடிவுக்கு ஆராய்ச்சியாளர்கள் வந்து விடுகின்றனர்.  இவர்கள் பஞ்சாபிற்கு கீழேயுள்ள தற்போதைய குஜராத், மஹாராஷ்டிரம் முதலிய பகுதிகளிலிருந்தும் சென்றிருக்க வேண்டும். இப்பகுதியை ஆண்ட வகடகர்கள் வருணாசர தாமதத்திற்கு மிகவும் முக்கியத்துவம் கொடுத்து யாகங்கள் செய்த பிராமண வகுப்பை சார்ந்தவர்கள்.  இவர்கள் குப்தர்களுக்கு கீழாக ஆண்டவர்கள் என்றாலும், இவர்கள் குப்தர்கள் மன்னர்களுடன் மணவினை புரிந்து மிக பெரிய அனவில் சுதந்திரமாகவே ஆட்சி புரிந்தவர்கள்.

இப்குதிக்கு வந்த பாகியான், அக்கால சமுதாய நிலைமை குறித்து எழுதும்பொழுது, உயர்ந்த சாதியினர், தங்களை எதிர்படாது விலகிப் போகும் வண்ணம் இச்சண்டாளர்களும், தீண்டத்தகாதவர்களும் தங்கள் கைகளிலுள்ள கொட்டுகளால் ஒலி எழுப்ப வேண்டும் என்று குறிப்பிடுகின்றார். ( Jaiswal 117)

தென்னிந்தியாவில் சங்க காலத்தில் பாட்டிசைப்போரும் யாழ் மீட்டுபவர்களும், அரசனுக்கும், குடும்பத் தலைவனுக்கும் நண்பனாக  இருந்து அரசு ஆணைகளை பறை அடித்து மக்களுக்கு அறிவிக்கும் அரசு ஊழியனாகவும், அரசனையும் மக்களையும் தங்கள் இசையால் மகிழ்வித்தவர்களாகவும் இருந்தனர். வேதகால இறுதியில் பிராமணர்கள் தங்கள் வடமொழியோடு தென் இந்தியாவிலும் பரவ ஆரம்பித்தனர்.  இங்கு வந்த பொழுது, சாதி அமைப்புபோடு ஆன தங்கள் சமயத்தை பரப்புவதற்காக இரண்டு முக்கியமான வழிகளை மேற்கொண்டனர். ஒன்று, இங்கிருந்த பகுதி சார்ந்த சமய சடங்குகளை சமஸ்கிரதமாக்குதல். இரண்டு, பிராமண சமுதாய அமைப்பை நிலைப்படுத்துதல். இவர்கள் அரசனுக்கு அருகாமையிலிருந்து அவர்களை வழிநடத்த தலைப்பட்டார்கள்.  அரசனோடு மிக நெருக்கமாக இருந்த பறையனும், பாணனும் நெருக்கடிக்கு ஆளாகி கீழ் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

    பாணர்களுடைய பாடல்கள் நன்றாக படித்த புலவனால், பாடல் ஏற்றும் செய்யுளாக மாற்றியமைக்கப்பட்டு  எழுதப்பட்டு வந்தன. ஆனால் வட இந்தியர் வரவால் பாணர் படிப்படியாக சமுதாய அடுக்கில் கீழே தள்ளப்பட்டனர். புலவர் கபிலர் அரசனிடம் நீ பாணரை கைவிட்டு புலவரை ஆதரிப்பாயாக என்று கூறுமிடத்து ஒரு மிகப்பெரிய சமுதாய மாற்றம் நிகழ்கிறது.  பாணனுடைய வேலை சிறிது சிறிதாக பறிக்கப்படுகிறது. கபிலர் ஒரு பிராமணர். ஆட்சியில் இருப்பவரின் ஆதரவு இன்றி பல்வேறு உடல் உழைப்பு வேலைகளை மேற்கொண்ட பாணர் சமுதாயம் கீழ்நோக்கி சரிந்தது, இந்நிலையிலிருந்த பறையனும் பாணனும், இழிவேலைகளை செய்பவனாக மாறினான்.  இறுதியில் தென்னிந்தியாவில் பிரமணீயத்தை தூக்கிப் பிடித்த இராஸ்டிரகுப்தர் மற்றும் சாளுக்கியர் ஆட்சியில், பாணர்கள் மிகவும் கீழான நிலையை அடைந்து தீண்டத் தகாதவர்களாக இழிநிலைக்கு ஆளாயினர்.

மொழிகளும் இசையும்

    இந்திய நாடு முழுவதும் பயின்று வந்தது பாணர் இசை என்று முதலில் கூறப்பட்டது.  ஹார்ட் தன்னுடைய நூலில் “சமஸ்கிருதத்திற்கான மரபு வழி மற்றும் செயற்கை யாப்பு வகைகளிலிருந்து ஒழுகிசை (melody) பிறக்க முடியாது என்றும், எளிய தமிழ் யாப்பு வகைகளிலிருந்தே பிறந்திருக்கும்” என்றும் கூறுகிறார்.(158) இதையே, கே.கிருஷ்ணமூர்த்தியும் ஒழுகிசை பல நூற்றாண்டுகளாக சாதாரண மக்களின் காதலை மையப்படுத்தி எழுதப்பட்ட கவிதைகளில் பயின்று வரும் வழக்க முறைகளில் பிறந்ததேயாகும் என்று கூறுகிறார்.

தமிழ் யாப்பு என்பது `அசை’ என்ற ஒலி வடிவத்தை அடிப்படையாகக் கொண்டது.  ஆனால் சமஸ்கிருத யாப்பு மாத்திரை என்ற எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டது.  அசையை அடிப்படையாகக் கொண்ட ஆரிய கிதி என்ற மராட்டிய பிராகிருத யாப்பு தமிழ் யாப்பை அடிப்படையாகக் கொண்டது என்கிறார் கே. கிருஷ்ணமூர்த்தி.(21) இந்த எளிய யாப்பு வகை மராட்டிய பிராகிருதத்தில் முதன் முதலில் பயன்படுத்தப்பெற்றது.  சதாசெய்2 என்ற தொகுப்பில், மராட்டிய பிராகிருதத்தில் எழுதப்பட்ட இந்நூலின் யாப்பை அடியொற்றியே, காளிதாசர் தான் எழுதிய சாகுந்தலம் என்ற நூலின் பாடல்களை எழுதினார். ஆனால் அப்பாடல்களை அவர் வட மொழியில்  எழுதாமல் மராட்டிய பிராகிருதத்தில் தான் எழுதியிருக்கிறார்.3  “பாணர்கள் என்பார் பழமை வாய்ந்த மற்றும் எளிய குடியை சேர்ந்தவர்களானதால் பழமை வாய்ந்த `பண்’ முறையிலான தென்னிந்திய இசை வட இந்தியாவிலிருந்து பெறப்பட்டது அல்ல.  அப்படி இல்லாது இந்திய இசையானது இத்தென்னிந்திய இசைமுறையிலிருந்து பெறப்பட்டது தான்” (158) என்று ஹார்ட் கூறுகிறார். இதிலிருந்து நாம் இன்றளவில் இந்தியாவில் பயின்று வரும் செவ்விசை முறைகள் இரண்டும், தென்னிந்தியாவில், அதிலும் தமிழ் இசையில் பிறந்தது என்று உறுதியாக கூறுமுடியும்.

    இவ்வாறாக இந்தியாயில் பாணர் வாழ்க்கை சமுதாய பொருளாதார ரீதியில் மிக நலிவடைந்த காலங்களில் இந்தியாவை விட்டு வெளியேறி உலகெங்கும் நாடோடிகளாகச் சுற்றித் திரிந்தனர்.  அவர்களுடைய இசை தமிழ இசைதான். இன்று குறவர் என்று தமிழ்நாட்டில் அழைக்கப்படும் வள்ளி பிறந்த இனத்தவரும், கட்டுவிருச்சி என்று கூறுப்படும் இனத்தவரும் தமிழ் பூர்வீகமே. குறத்தியர் இசை இந்திய இசையே என்று கூறும் ரோஸந்தால், “கந்தன், குறத்தியாகிய வள்ளியை தன்னுடைய இரண்டாவது மனைவியாக்கிய கதையை தென்னிந்தியா முழுவதும் நடிக்கவும், பாடவும் செய்கின்றனர்.  குறத்தியரின் பூர்வீகம் பற்றியதான பாடல்கள் இந்த நாடகங்களிலும் பாடல்களிலும் இடம் பெறுகின்றன. இக்குறவ இனத்தின் பலகிளைகளும் தமிழை தங்கள் இரண்டாவது மொழியாக கொண்டாலும், தங்களுக்கு உரித்தான பேச்சு வழக்கு வகையினை தங்களுக்குள் தக்க வைத்துக் கொள்கின்றனர்”(95) என்று கூறுகிறார். இவர்களுக்கும் உலகெங்கும் உள்ள நாடோடி மக்களுக்கும் உரிய கலாச்சார ஒற்றுமைகளை நாம் எளிதாக அறியலாம். இறுதியாக கிரேல்மென் இந்திய சூத்திரர்கள் தான் குறவர்கள் என்று கூறி அவர்களை பின்வருமாறு வர்ணிக்கிறார். “யாரிடமாவது சிறிது பொருள் கிடைக்காதா என்ற எண்ணத்துடன், இசையாளரான தன் தகப்பனுடன், பாடி நடனமாடும் குறத்தி பெண்னும் இந்தியாவை சேர்ந்தவளே”.  பெரும்பாணாற்றுப்படையில் பாணனின் மகள் பின்வருமாறு வர்ணிக்கப்படுகிறாள்.

 வெந்தெறற் கனலியடு மதிவலந் திரிதருந்

தண்கடல் வரைப்பிற் றாங்குநர்ப் பெறாது

பொழிமழை துறந்த புகைவேய் குன்றத்துப்

பழுமரந் தேரும் பறவை போலக்…

கல்லென் சுற்றமொடு கால்கிளர்ந்து திரிதரும்

புல்லென் யாக்கைப் புலவுவாய்ப் பாணி,, (12-17)

இவ்விரண்டு வர்ணனைகளையும் ஒப்பீடு செய்யும் போது உலகெங்கும் பரவி கிடந்த நாடோடி இனத்தின் இசையானது தமிழக பாணனின் இசையே என்பது தெள்ளத் தெளிவு.

1.கிரெல்மென் இந்தியா முழுவதும் பேசப்பட்ட மொழி வட மொழியே என்றும், அவை இடத்திற்கு இடம் மாறுபட்டதாக உள்ளதாகவும் கூறுகிறார்.  கங்கை நதியோரங்களில் பேசப்பட்ட பேச்சு வழக்கு வகைகள் சிந்து நதிக்கரையோரம் பேசிய பேச்சு வழக்கு முறைகளிலிருந்து மாறுபடுகின்றன என்றும், சூரத்தில் பேசிய மொழியில் மலபாரில் பேசப்பட்டு வந்த மொழியின் சொற்கள் அதிகமாக இருந்தனவென்றும் கூறுகிறார்.

2. இந்நூல் காம சூத்திரம் என்ற வடமொழி நூலைப் போன்று காம இலக்கணத்தைக் கூறாது, தமிழின் அகப்பாடல் மரபில் காதல் குறித்து தமிழ் யாப்பை பயன்படுத்தி எழுதப்பட்ட நூல்.  இவை அகப்பாடல்களை பெருமளவில் நினைவு படுத்துபவை.

1, அம்மா

ஒரு கண் இமை பொழுதில்

    மறைந்தது அவன் காதல்

    நகை ஒன்று ஊசலாடியது

    என் உலகில்; மறைந்தது

அடைய எத்தனிக்கையில்

2, தனியாக ஆண்மான்

வெளியிடை நின்றது

ஏக்கத்துடன் நோக்கியது பெண்மான்

தன் மான் கண்ணால்;

வேடன் நோக்கினான் மரத்திலிருந்து

தன் மகள் கண்டான்

தரையில் விழுந்தது அம்பு

3. சாகுந்தலத்தில் பாடல் வகைகள் அனைத்தும் மராட்டிய பிராகிருதத்தில் எழுதப்பட்டதேயாகும். வசனங்களை காளிதாசர் உரைநடையிலேயே எழுதியிருக்கிறார் என்று குறிப்பிடத்தக்கது.

Bibliography

A. Books

1.Barney, Z. (2002).The East European Gypsies. Cambridge.

2Day, C.R. The Music and Musical Instruments of South India and the Deccan. London:Novello Emer and Co.

3.Fox –Strangways A.H. (1914). The Music of Hindostan. Oxford:Clarenden Press.

4. Hart, George L. The Poems of Ancient Tamil. Delhi: Oxford University Press, 1999

5. Henrick,D. and Puxton D.(2009)Gypsies under the Swastika, Hatfield.

6.Hunter, Sir. William Wilson.(1893). The Indian Empire. London:W.H.Auden and Co.

7.Ian Hancock,Dileep Karanth (2010). Danger!Educated Gipsy: Selected Essays. University of Hertfordshire.

8. Krishnamoorthy, K. Kalidasa. Delhi. Sakithya Akademy, 1994 Madurai: Thirunavukkarasar Isai Aracchi Arakkaṭaḷai, 2004

9 . Rosenthal, Ethel. The Story of Indian Music and its Instruments. New Delhi: Oriental Reprint Corporation, 1980.

10. Turner,R.L.(1966). A Comparative Dictionary of the Indo-Aryan Languages. Oxford.

11Wilson, N. (1980).  Gypsies and Gentlemen.

B. Articles and Dissertations

1.Blachut,K.B.(2005). Transient Criminal Subculture against the Elderly:Implications for Continuing Criminal Justice and Community Education. Unpublished D.E.Dissertation, University of Illinois- WEB

2.GrellmannH.M.G.(1787). Historical Enquiry Concerning the Gypsies. Trans Matthew Raper- WEB

3. Suvira Jaiswal(1980) Changes in the Status and Concept of the Sudra Varna in Early Middle Ages. Proceedings of the Indian History Congress. Vol.41P. 112-121-WEB

Print Friendly, PDF & Email

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *