எங்களைப் பற்றி

நோக்கம்

கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்தகுடி தமிழ்க் குடி எனும் கூற்றுக்கிணங்கப் புல்லுக்குள் காற்றைப் புகுத்தி குழலிசையினையும் வில்லிலிருந்து அம்பைச் செலுத்தி நரம்பிசையினையும் எழுப்பி உலகிற்கு முதன்முதலில் இசையினை அறிமுகப் படுத்தியவன் தமிழன். இலைகளாலும் தென்னங்கீற்றாலும் பனை ஓலையாலும் இசை ஒலிகளை உண்டாக்கியவன் தமிழன். மண்ணைச் சுட்டுப் பானையாக்கி அதைப் பண்ணிசைக் கருவியாக்கியவன் தமிழன். ஐந்து முகக் குடுவைகளை வடிவமைத்து
அம்முகங்களை விலங்குகளின் தோலைக்கொண்டு இறுகக் கட்டி, தோலிசைக் கருவிகளை உண்டாக்கி ஒவ்வொரு முகத்திலிருந்தும் ஒவ்வொரு வகையான இசையினை மீட்டவன் தமிழன். தனது
உடலுறுப்புகளையே கருவியாகக் கொண்டு இசைகளை எழுப்பியவனும் தமிழனே!.


ஓரறிவு முதல் ஆறறிவு வரை உள்ள அனைத்து உயிரினங்களையும் தனது இசை ஞானத்தால் மகிழ்வித்து தனது கட்டுப்பாட்டில் வைத்தவன். தமிழிசை மன்றங்களை அமைத்துக் கோவில்களிலும் கோட்டைகளிலும் இசை நிகழ்ச்சிகளை நிகழ்த்தியதோடு மட்டுமல்லாமல் இசை ஓவியங்களாகவும் சிற்பங்களாகவும் வடித்து
வைத்தவன் தமிழன். கல்லைக்கொண்டும் கல்லிசைத் தூண்களை அமைத்தவன் தமிழன். தேவாரம், திருவாசகம் எனப் பக்திப் பாடல்களை இயற்றி அவற்றை இசைக்குள் புகுத்தும் இசைஞானம் கொண்டவன்
தமிழன். அவ்விசைக்கேற்ப நடனத்தையும் அரங்கேற்றம் செய்தவனும் தமிழனே! குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐவகை நிலத்திற்கேற்பவும் அந்நில வாழ்வியல் சூழலுக்கேற்பவும் பண் அமைத்து இன்பம் கண்டவன் தமிழன்!


தமிழிசையினைப் போற்றும் வகையிலும் உலகெங்கும் தமிழிசையின் மேன்மையினைப் பரப்பும் வகையிலும், தமிழிசையின் தொன்மையினை மீட்டுருவாக்கம் செய்யும் நோக்கிலும் ‘தமிழ் இசையியல்’ பன்னாட்டு மின்னிதழ் தொடங்கப்பட்டுள்ளது. இது அரையாண்டு இதழாக ஆண்டுக்கு இரு முறை மலரும். இவ்விதழில் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் கட்டுரைகள் இடம்பெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். இம்மின்னிதழ் உலகெங்குமுள்ள தமிழிசை ஆய்வறிஞர்களுக்கும், தமிழிசைக் கலைஞர்களுக்கும், தமிழ் ஆய்வறிஞர்களுக்கும் தமது ஆய்வு முடிபுகளையும் கருத்துகளையும் பகிந்துகொள்ள இது ஒரு சிறந்த தளமாக அமையும் என்பதில் பெருமிதமே! தமிழிசையே உலகின் முதலிசை! தமிழிசையே உலக இசைகளுக்கெல்லாம் தாய்!


மீட்டுவோம் தமிழிசையே!
நாட்டுவோம் தமிழின் பெருமையே!!